கண்டமங்கலம் அருகே, மினி லாரியில் கடத்திய 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கண்டமங்கலம் அருகே மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-06-24 23:00 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள பாக்கம் கூட்டுசாலை பகுதியில் நேற்று காலை கண்டமங்கலம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு மினி லாரியை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த மினி லாரிக்குள் 35-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 1,225 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மினி லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், புதுச்சேரி மாநிலம் மடுகரை பகுதியை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 20) என்பதும், அவர் மடுகரை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் குறைந்த விலைக்கு அரிசி மூட்டைகளை வாங்கி அதனை ஏம்பலம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திவந்தபோது சிக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்