திருப்பத்தூரில், பள்ளி இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டிடம் கட்ட எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருப்பத்தூரில் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-24 22:30 GMT
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் 35-வது வார்டு அவ்வை நகரில் ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான இடம் 100 மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த இடம் காலியாக உள்ளதால் அதனை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நகரம் மற்றும் ஊரக பகுதிகள் குப்பையில்லா இடங்களாக தூய்மையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பையாக தரம்பிரித்து உரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவ்வை நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சொந்தமான இடத்தை திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு தேர்வு செய்து அங்கு கட்டிடம் கட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர்.

கட்டிடம் கட்டிய பின்னர் அங்கு குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று நகராட்சி காலி இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அளவீடு செய்வதற்காக என்ஜினீயர்கள் மற்றும் அதிகாரிகள் வந்தனர்.

இதற்கு அந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தரம்பிரிப்பதற்காக குப்பைகள் இங்கு கொட்டப்பட்டால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படலாம் என்ற தவறான கருத்து பரவியதால் அதிகாரிகள் அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது “இது பள்ளிக்கு சொந்தமான இடம். இங்கு நீங்கள் எப்படி நகராட்சி திட்டத்துக்கு கட்டிடம் கட்டலாம். இங்கு திடக்கழிவு மேலாண்மை கட்டிடம் கட்ட விடமாட்டோம்” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணி மேற்பார்வையாளர் சீனிவாசன், ஆய்வாளர் அன்பரசு ஆகியோர் அவர்களிடம், “இது நகராட்சிக்கு சொந்தமான இடம்தான். நகராட்சிதான் பள்ளிக்கு இந்த இடத்தை கொடுத்துள்ளது. எனவே இங்கு கட்டிடம் கட்டுவதை தடுக்க முடியாது” என்றனர்.

ஆனால் பொதுமக்கள் “இங்கு குப்பைகள் கொட்டப்போவதாக கூறுகிறார்கள். எனவே இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு கட்டிடம் கட்டக்கூடாது” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு அதிகரித்ததையடுத்து “இந்த பிரச்சினை குறித்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம். சப்-கலெக்டர் விடுமுறை முடிந்து வந்தவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும்” என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பணியும் நிறுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்