அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் - அடுத்த மாதம் 4-ந் தேதி கடைசி நாள்

அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கு அடுத்த மாதம்(ஜூலை) 4-ந் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-06-24 22:15 GMT
ஊட்டி,

அம்மா இருசக்கர வாகன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் பணிக்கு செல்லும் அல்லது சுய தொழில் செய்யும் பெண்கள் பயன் பெறலாம். இத்திட்டத்தின் மூலம் கிராம மற்றும் நகர்புறங்களில் இருந்து வேலைக்கு செல்லும் 1,074 பெண்கள் கடந்த ஆண்டு பயன் அடைந்தனர். இதேபோல் நடப்பாண்டிலும் 1,074 பயனாளிகளை தேர்வு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. எனவே விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலோ அல்லது சுயமாகவோ தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருசக்கர ஓட்டுனர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.

பயனாளிகள் கொள்முதல் செய்யும் இருசக்கர வாகனங்கள் 1.1.2019-ந் தேதிக்கு பின் உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். 125 சி.சி. திறனுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இந்திய வாகன சட்டத்தின் படி பதிவு செய்யப்பட தக்க வாகனமாக இருக்க வேண்டும். பயனாளிகள் வயது வரம்பு சான்று, இருப்பிட சான்று, ஓட்டுனர் உரிமம், வருமான சான்று, பணிபுரிவதற்கான சான்று, சுயதொழில் புரிவதற்கான சான்று, ஆதார் அட்டை, கல்வி சான்று(குறைந்தபட்ச தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி), புகைப்படம், விதவை, ஆதரவற்ற மகளிர், 35 வயதுக்கு மேல் திருமணமாகாத பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கான சான்றிதழ், சாதிச் சான்றிதழ்(தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்), மாற்றுத்திறனாளிகள் உரிய அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட சான்று, இருசக்கர வாகனத்திற்கான விலைப்பட்டியல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதி உள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்ப படிவங்களை பெற்று, நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ இதே அலுவலகங்களுக்கு கடைசி நாளான அடுத்த மாதம்(ஜூலை) 4-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்