நாகர்கோவில் நகரில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை

நாகர்கோவில் நகரில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-06-25 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ஏ.அசோகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) வேத அருள்சேகர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க. நகர செயலாளர் சந்துரு, தி.மு.க. நகர செயலாளர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மையம் தொடங்கி, பொதுமக்களிடம் பெறப்படும் புகாரை பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி குறித்த காலத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட வேண்டும். நகரில் தற்சமயம் 863 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அவற்றில் 43 ஆழ்துளை கிணறுகள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. நகரில் பயன்படுத்த இயலாத ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக புதிய போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உடனடியாக கையிருப்பில் உள்ள புதிய குடிநீர் தொட்டிகள் மூலம் உடைந்த குடிநீர் தொட்டியை மாற்றி அமைக்க வேண்டும். வீட்டு குடிநீர் இணைப்பில் மின்மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சி எடுப்பதை கண்டறிந்து, மின்மோட்டாரை பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரில் பிரதான சாலையாக உள்ள அவ்வை சண்முகம் சாலை அமைக்க 12-7-2019 அன்று டெண்டர் கேட்கப்பட உள்ளதை தொடர்ந்து 25-7-2019-க்குள் முடிக்கப்பட வேண்டும். நகரில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகளை வருகிற 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். ஆராட்டு தெருவில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்