குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மாணவர்கள்- பொதுமக்கள் சாலை மறியல்

சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-25 23:00 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் பெல்லட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உத்தனப்பள்ளி, சூளகிரி சாலையில் பெல்லட்டி பஸ் நிறுத்தத்தில் காலிக்குடங்களுடன் திரண்டனர். அவர்கள் குடிநீர் கேட்டு திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெபராஜ் சாமுவேல், உத்தனப்பள்ளி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்கள் பகுதிக்கு கடந்த 4 மாதமாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தண்ணீருக்காக கிராமமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். இதனால் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த கிராமத்திற்கு சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவ- மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்