திருவண்ணாமலை அருகே, விற்பதாக கூறிய வீட்டை காலி செய்ய மறுத்ததால் பெண் மீது தாக்குதல் - தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது

வீட்டை விற்பதாக கூறிவிட்டு காலி செய்ய மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கிய தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-25 22:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே உள்ள மங்கலம் நத்தை கொல்லை பகுதியை சேர்ந்தவர் குப்பு (வயது 42). இவரது கணவர் தட்சிணாமூர்த்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின் குப்பு கேரளாவுக்கு சென்று வேலை செய்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக அவர் தான் குடியிருந்த வீட்டையும், அதன் அருகில் இருந்த காலி மனையையும் விற்க முடிவு செய்தார். இதனையொட்டி அதே பகுதியை சேர்ந்த முருகன் மனைவி செல்வகுமாரி (47) என்பவரிடம் விற்பதற்காக ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்திற்கு கிரயம் பேசி ரூ.1 லட்சத்தை முன் பணமாக பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் குப்பு வீட்டை காலி செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 21-ந் தேதி கேரளாவில் இருந்து நத்தைகொல்லைக்கு வந்த அவர் குடும்ப நண்பர் ஷாகித்துடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்குவந்த முருகன், மனைவி செல்வகுமாரி, மகன் திவ்யபாரதி (25), உறவினர் பிரகாஷ் (55) ஆகியோர் குப்புவிடம் “எங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடு, அல்லது வீட்டையும், காலி மனையையும் எழுதிக் கொடு” என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த பிரச்சினையில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குப்புவை அவர்கள் தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற ஷாகித்தும் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த குப்பு, ஷாகித் ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து முருகன், அவரது மகன் திவ்யபாரதி, உறவினர் பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்