கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில், குரங்குகள் அட்டகாசத்தால் நிம்மதி இழந்து தவிக்கும் பொதுமக்கள் - வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் படையெடுத்து வரும் குரங்குகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2019-06-25 22:30 GMT
கண்ணமங்கலம், 

கண்ணமங்கலம் அருகே ஜவ்வாதுமலைப்பகுதி உள்ளது. தற்போது மலையில் ஏற்பட்டுள்ள வறட்சியால் அங்குள்ள குரங்குகள் அருகே உள்ள ஊர் பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த பகுதியில் முகாமிட்டுள்ள குரங்குகள் செல்போன் டவர்களில் இரவு நேரத்தில் குட்டிகளுடன் தங்கி விடுகின்றன. பின்னர் பகல் நேரங்களில் அவை குட்டிகளுடன் ரோட்டை கடந்து ஊருக்குள் புகுந்து வருகின்றன. சிறுவர்கள் கொண்டு செல்லும் தின்பண்டங்களை மிரட்டி பறிக்கும் குரங்குகள் அவற்றை ரோட்டில் வீசுகின்றன. மேலும் விரட்டுவோர் மீதும் பாய்வதுபோல் வருகின்றன.

இவை வீடுகளுக்குள்ளும் புகுந்து உணவுப்பொருட்களை பறித்துக்கொண்டு ஓடுகின்றன. எந்த நேரத்திலும் குரங்குகள் வந்து அட்டகாசத்தில் ஈடுபடலாம் என்பதால் குடியிருப்புவாசிகள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.

குறிப்பாக சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண் குரங்குகள் தற்போது குட்டிகளுடன் உலவி வருவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

அதிகாரிகள் உள்பட வசதியானவர்கள் வசிக்கும் பகுதியில் குரங்குகள் புகுந்தால் அவற்றை அவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வனத்துறையினரை அழைக் கின்றனர். அவர்களும் இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து மலைப்பகுதிக்கு கொண்டு சென்று விடுகின்றனர். ஆனால் நாங்கள் தினமும் உழைத்தால்தான் சாப்பிட முடியும். நாங்கள் அரும்பாடுபட்டு சம்பாதித்து வருகிறோம். ஆனால் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை சூறையாடுகின்றன. இதனால் நாங்கள் நிம்மதியின்றி தவிக்கிறோம். எனவே குரங்குகளை வனத்துறையினர் பிடித்துச்சென்று வனப்பகுதிக்குள் விடுவதற்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்