ஜெயங்கொண்டம் அருகே சைக்கிளில் சென்ற கூலி தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை

ஜெயங்கொண்டம் அருகே சைக்கிளில் சென்ற கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-06-26 23:15 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓரேப் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு குமாரி என்ற மனைவியும், இந்துமதி, காந்திமதி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். செல்வராஜ் நேற்று மாலை ஒரேப் கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில் அவர் மணக்கரைக்கும், சின்ன வளையம் கிராமத்திற்கும் இடையே உள்ள குன்றான்குழி ஏரியின் அருகே சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த மர்மகும்பல் ஒன்று அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

செல்வராஜ் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதையடுத்து செல்வராஜ் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கொலை செய்த மர்மநபர்கள் யார்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத் வருகின்றனர். தொழிலாளியை மர்மநபர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்