கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு ரூ.25 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் விவேகானந்தா படகு ரூ.25 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. அதற்காக சின்னமுட்டத்தில் கரையேற்றப்பட்டு பணிகள் தொடங்கியது.

Update: 2019-06-26 23:00 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகின்றனர்.

இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை இடைவேளையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த 3 படகுகளிலும் தலா 150 பேர் பயணம் செய்யலாம். மேலும், சீசன் காலங்களில் தினமும் 10 ஆயிரம் பேரும், சீசன் இல்லாத காலங்களில் தினமும் 5 ஆயிரம் பேரும் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வருகிறார்கள்.

சீரமைப்பு பணிக்காக...

இந்த 3 படகுகளும் ஆண்டுக்கு ஒருமுறை கரையேற்றப்பட்டு பழுது பார்க்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விவேகானந்தா படகு கடலில் இயக்கும் காலக்கெடு முடிந்து விட்டதால், நேற்று இந்த படகு கடல் வழியாக சின்னமுட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்குள்ள படகு தளத்தில் கரையேற்றப்பட்டு ரூ.25 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இந்த சீரமைப்பு பணிகள் 30 நாட்கள் நடக்கிறது. ஆகஸ்டு மாதம் சீரமைப்பு பணிகள் முடிந்து மீண்டும் கடலில் இறக்கப்படும். பின்னர், மாநில துறைமுக அதிகாரி முன்னிலையில் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துறைமுக அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்துவார்கள். அதன்பிறகு படகுக்கு தகுதிச்சான்று வழங்கப்படும். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு புதுப்பொலிவுடன் இயக்கப்படும்.

மேலும் செய்திகள்