சேலத்தில் கனமழை: மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சேலத்தில் பெய்த கனமழையால் சாலையோரம் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-06-26 23:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மாலை வேளையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில், சேலம், ஏற்காடு, எடப்பாடி, சங்ககிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மாலையில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

குறிப்பாக சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டை, கிச்சிப்பாளையம், கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால், சாலையிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் சங்கர் நகர் மற்றும் பெரமனூர் பகுதியில் பெய்த கனமழையால் சாலையோரம் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு சென்று சாலையில் விழுந்த மரக்கிளைகளை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு போலீசாரும் உதவி செய்தனர்.

பின்னர் சிறிது நேரத்தில் சாலையில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. சேலத்தில் பெய்த கனமழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியதோடு இதமான சீதோஷ்ணநிலையே காணப்பட்டது.

மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட மணக்காடு ராஜகணபதி நகர் பகுதியில் போதுமான அளவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீருடன் மழைநீர் சேர்ந்து தெருவில் ஆறாக ஓடியதை காணமுடிந்தது.

இதனால் தெருவில் அதிகளவில் தண்ணீர் தேங்கி கிடந்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும், இதனால் அந்த பகுதியில் கொசு மருந்து தெளிக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜகணபதி நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் கடந்த சில நாட்களாக புழுக்கத்தில் பரிதவித்த பொதுமக்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- சேலம்-28.4, ஆனைமடுவு-20, ஏற்காடு-8.2, எடப்பாடி-5, சங்ககிரி-5.2.

மேலும் செய்திகள்