கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, ஷயான், மனோஜ் உள்பட 9 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக ஷயான், மனோஜ் உள்பட 9 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Update: 2019-06-26 22:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. சதீசன் மற்றொரு வழக்கில் கேரள சிறையில் இருப்பதால், ஊட்டி கோர்ட்டில் ஆஜராகவில்லை. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஷயான் மற்றும் மனோஜ், திபு, பிஜின் ஆகிய 4 பேரை போலீசார் கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வந்து ஆஜர்படுத்தினார்கள். மேலும் ஜாமீனில் உள்ள மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, உதயகுமார், ஜித்தின்ராய், சம்சீர் அலி ஆகிய 5 பேர் ஆஜரானார்கள்.

இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து 10 பேரையும் விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வாதம் நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல் ஆனந்த் ஆஜராகி நீதிபதி வடமலையிடம் தெரிவித்த தாவது:-

இந்த வழக்கு அரசியல் அழுத்தம் காரணமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரைக்குள் கொலை நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் வாக்குமூலம் அளித்த காவலாளி கிருஷ்ணபகதூரை காலை 6 மணிக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர். போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் கொலை நடந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் கொலை சம்பந்தமாக 302 பிரிவு முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யவில்லை.

கிருஷ்ணபகதூர் தனக்கு சிலர் மயக்க மருந்து தெளித்ததாகவும், அதனால் மயக்கம் ஏற்பட்டதாகவும், கத்தி மூலம் கையில் காயம் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்து உள்ளார். ஆனால் டாக்டர்கள் அவருக்கு சிறு காயம் என்று தெரிவித்தனர். மயக்க மருந்து பயன்படுத்தியது குறித்த அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் சம்பவம் நடந்தது குறித்து கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய சி.டி. தாக்கல் செய்யப்படவில்லை.

போலீசார் கைப்பற்றிய கைக்கடிகாரம், கண்ணாடி பொம்மை போன்றவை கடையில் கிடைக்கக்கூடியது. ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் என்பவர் அரசு மூலமாகவோ அல்லது தனியார் மூலமாகவோ டிரைவர் என்று பதிவு செய்யப்படவில்லை. எனவே வழக்கில் இருந்து அனைவரையும் விடுவிக்க வேண்டும். மேலும் சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகள் அடங்கிய சி.டி. தாக்கல் செய்யப்படுவதோடு, தனக்கு ஒரு நகல் தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(ஜூலை) 8-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். இதையடுத்து ஷயான், மனோஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். 

மேலும் செய்திகள்