10 நிமிடத்தில் கிராம சபை கூட்டத்தை முடித்த அரசு அதிகாரிகளை அலுவலகத்துக்குள் வைத்து பூட்டி பொதுமக்கள் போராட்டம்

மதுராபுரி ஊராட்சியில், 10 நிமிடத்தில் கிராமசபை கூட்டத்தை முடித்த அரசு அதிகாரிகளை அலுவலகத்துக்குள் வைத்து பூட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-28 22:00 GMT
துறையூர்,

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளிலும் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில், மதுராபுரி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தின்போது, அந்த கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை உள்பட அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேள்வி கேட்க கிராம மக்கள் காத்திருந்தனர்.ஆனால், தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர்கள் சுமார் 50 பேரை கொண்டு கூட்டத்தை தொடங்கிய அதிகாரிகள் 10 நிமிடங்களில் கூட்டத்தை முடித்துக்கொண்டு புறப்பட முயன்றனர். உடனே பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் இதுபற்றி கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்காததால், காலை 11 மணி அளவில் அரசு அதிகாரிகளை ஊராட்சி அலுவலகத்துக்குள் வைத்து அடைத்து பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றிய தகவல் துறையூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் மதியம் 1 மணி வரை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை திறந்து அதிகாரிகளை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்