பிள்ளையார்நத்தத்தில், குடிநீர் வழங்கக்கோரி, கிராம சபை கூட்டத்துக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

பிள்ளையார்நத்தத்தில், குடிநீர் வழங்கக்கோரி கிராம சபை கூட்டத்துக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகள் மீது மணலை வாரி தூற்றிவிட்டு கூட்டம் தொடர்பாக வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-28 22:45 GMT
செம்பட்டி,

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கு, ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் ஆத்தூர், சீவல்சரகு, வக்கம்பட்டி, என்.பஞ்சம்பட்டி, பிள்ளையார்நத்தம், பித்தளைப்பட்டி ஆகிய கிராமங்களின் குடிநீர் தேவையும் ஆத்தூர் காமராஜர் அணை மூலமே பூர்த்தியாகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் புதிதாக குழாய்களை பதித்து அவற்றின் மூலம் திண்டுக்கல்லுக்கு குடிநீரை மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வந்தது. மேலும் பழைய குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆத்தூர், சீவல்சரகு, வக்கம்பட்டி, என்.பஞ்சம்பட்டி, பிள்ளையார்நத்தம், பித்தளைப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களை, பொதுமக்கள் பலமுறை சந்தித்து இதுதொடர்பாக மனு கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் ஆத்தூர் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பிள்ளையார்நத்தத்தில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியன், ஊராட்சி செயலர் அழகர்சாமி மற்றும் அதிகாரிகள் வந்தனர்.

அப்போது அங்கு ஏற்கனவே காத்திருந்த பொதுமக்கள், அதிகாரிகளை கூட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் தடுத்து அவர்களை முற்றுகையிட்டனர். பின்னர் எங்களுக்கு குடிநீர் கொடுத்த பிறகு கிராம சபை கூட்டத்தை நடத்துங்கள் என கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாவட்ட கலெக்டர், திட்ட இயக்குனர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி ஓரிரு வாரத்துக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியன் உறுதியளித்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள், அதிகாரிகள் மீது மணலை வாரி தூற்றினர். மேலும் அங்கு கிராம சபை கூட்டம் தொடர்பாக வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்து எறிந்துவிட்டு திண்டுக்கல்- தேனி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் சாலையின் குறுக்கே பொக்லைன் எந்திரத்தையும் நிறுத்தி வைத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதையடுத்து புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை பொதுமக்கள் ஏற்கவில்லை. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் திண்டுக்கல்-தேனி சாலையோரத்தில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயை பொக்லைன் எந்திரம் மூலம் வெளியே எடுக்க முயன்றனர்.

அவர்களை போலீஸ் துணை சூப்பிரண்டு தடுத்து நிறுத்தினார். அதையடுத்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுடன் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கருப்பையா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து பொதுமக்கள் மீண்டும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்களுடன் இந்த பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி பிள்ளையார்நத்தம் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உறுதியளித்தார். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல், ஆத்தூர் ஒன்றியம் பாளையங்கோட்டை ஊராட்சி காமன்பட்டியில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட ஊராட்சி செயலர் (பொறுப்பு) பால்ராஜ் ஊராட்சி பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து பேச தொடங்கினார். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் அவரை பேச விடாமல் தடுத்தனர். மேலும் அவர்கள் தங்களுக்கு குடிநீர் கொடுத்துவிட்டு கூட்டத்தை நடத்துங்கள் என கோஷமிட்டனர். பின்னர் திடீரென காலிக்குடங்களுடன் செம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் கூலம்பட்டி பிரிவு அருகே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது முறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்தும், பாளையங்கோட்டைக்கு தனி செயலரை நியமிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கருப்பையா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் பிரச்சினை, தனிசெயலர் நியமனம் ஆகிய கோரிக்கைகள் ஒரு வாரத்துக்குள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். 

மேலும் செய்திகள்