மதுரை அருகே, வீட்டு வரைபட அனுமதிக்கு லஞ்சம் கேட்ட பஞ்சாயத்து செயலாளர் கைது

மதுரை அருகே வீட்டு வரைபட அனுமதிக்கு லஞ்சம் கேட்ட பஞ்சாயத்து செயலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-06-28 22:30 GMT
மதுரை, 

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம். போலீஸ் ஏட்டாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் மதுரை அருகே ஆலாத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. அந்த இடத்தில் வீடு கட்ட சங்கரலிங்கம் திட்டமிட்டார். இதற்காக வீட்டு வரைபட அனுமதி கேட்டு ஆலாத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால், நீண்டநாட்களாகியும் அவருக்கு வீடு கட்ட வரைபட அனுமதி கிடைக்கவில்லை. பஞ்சாயத்து அலுவலகத்தில் செயலாளராக பணியாற்றி வரும் சுந்தரபாண்டி(வயது 50) என்பவர், வீட்டு வரைபட அனுமதிக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

ஆனால், லஞ்சம் தர விரும்பாத சங்கரலிங்கம், இதுகுறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் ஆலோசனையில் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நேற்று பஞ்சாயத்து செயலாளர் சுந்தரபாண்டியிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று சுந்தரபாண்டியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்