நெல்லையில் முதியவர் கொலையில் 2 பேர் கைது

நெல்லையில் முதியவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2019-06-29 22:15 GMT
நெல்லை,

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பண்டாரம் (வயது 75). இவர் தாமிரபரணி ஆற்றில் மீன் பிடித்து வியாபாரம் செய்து வந்தார். இவர் தினமும் மீன்பிடித்து விற்பனை செய்து விட்டு, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு சாப்பிட்டு விட்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆத்தங்கரை சுடலைமாட சுவாமி கோவில் மண்டபத்தில் படுத்து தூங்குவார்.

இந்தநிலையில் கடந்த 27-ந்தேதி காலை பண்டாரம் கோவில் மண்டபத்தில் உள்ள மேடையில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் இரவில் கோவில் பகுதிக்கு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் போலீசார் நேற்று நெல்லை சந்திப்பு சன்னியாசி கிராமத்தை சேர்ந்த முத்து சரவணன் மகன் வரதராஜன் (24), சிவபுரத்தை சேர்ந்த மாடசாமி மகன் ராஜகுருநாதன் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதில் ராஜகுருநாதன் நெல்லை மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தன்று இவர்கள் ஆத்தங்கரை சுடலைமாட சுவாமி கோவில் வளாகத்தில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பண்டாரம், 2 பேரையும் கண்டித்துள்ளார். மேலும் சமுதாயம் குறித்தும் பேசி உள்ளார். தங்களது சமுதாயத்துக்கு சொந்தமான கோவிலில் தினமும் படுத்து தூங்குவதுடன், தங்களையே கண்டிக்கிறாரே? என்று ஆத்திரம் அடைந்த 2 பேரும் பண்டாரத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்