6 மாத கர்ப்பிணி வயிற்றில் ஒட்டி இருந்த இரட்டை குழந்தை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து எடுத்தனர்

நாகர்கோவிலில் 6 மாத கர்ப்பிணி வயிற்றில் ஒட்டியபடி இரட்டை குழந்தை இருந்தது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் மூலம் இந்த குழந்தைகள் எடுக்கப்பட்டன.

Update: 2019-06-29 22:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கும், அவருடைய மனைவிக்கும் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் அந்த பெண் 2-வதாக கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அவர் பரிசோதனை மேற்கொண்டு வந்தார். கர்ப்பம் அடைந்து 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் அந்த பெண் மீண்டும் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

அப்போது தாயின் வயிற்றில் குழந்தை சரியான வளர்ச்சி அடைந்திருக்கிறதா? என்று டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். ஆனால் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த டாக்டர்கள் வியந்து போனார்கள். ஏன் எனில், அந்த பெண்ணின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்தன. ஆனால், இந்த 2 குழந்தைகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி காணப்பட்டது.

அதிர்ச்சி

இந்த தகவலை கணவன், மனைவியிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதை கேட்டதும் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் இந்த பெயர் வைக்கலாம், பெண்ணாக பிறந்தால் அந்த பெயர் வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இரட்டை குழந்தைகள் ஒட்டியபடி பிறக்கப்போகிறது என்றதும் அவர்களுக்கு சோகம் ஏற்பட்டது. ஒட்டியபடி உள்ள இரட்டை குழந்தைகளை தங்களால் வளர்க்க முடியாது என்று பெற்றோர் எண்ணினார்கள்.

எனவே குழந்தையை வயிற்றில் இருந்து வெளியே எடுத்துவிடுமாறு டாக்டர்களிடம் அவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த பெண்ணுக்கு ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை ஆஸ்பத்திரியில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.

இறந்தே பிறந்தது

ஒட்டியபடி இருந்த இரட்டை குழந்தைகள் வெளியே எடுக்கப்பட்டன. குறை மாதத்திலேயே ஆபரேஷன் மூலமாக தாயின் வயிற்றில் இருந்து வெளியே எடுத்ததால், அந்த இரட்டை குழந்தைகள் உயிர் பிழைக்கவில்லை. இறந்தே பிறந்தது. இதனையடுத்து இரட்டை குழந்தையின் உடலை பெற்றோரிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். பின்னர் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்று இறுதிச் சடங்கு செய்தார்கள்.

இரட்டை குழந்தைகள் ஒட்டியபடி பிறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் செய்திகள்