உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் ஆனி திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது

உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் ஆனி திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது.

Update: 2019-06-29 22:30 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. விழாவின் முதல் நாளில் பணிவிடை, உகப்படிப்பு, கொடியேற்றம், அன்னதர்மமும், கோலப்போட்டி, அய்யா தொட்டில் வாகன பவனி ஆகியவை நடந்தது.

தொடர்ந்து வந்த திருவிழா நாட்களில் காலை, மதியம், மாலை நேரங்களில் பணிவிடை, உகப்படிப்பு, அய்யா வாகன பவனி வருதல், அன்னதர்மம் போன்றவை நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவில் நேற்றுமுன்தினம் அய்யா குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடி தவக்கோலத்தில் வடக்கு வாசலில் மக்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும். நாளை காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 10 மணிக்கு அன்னதர்மம், பகல் 1 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு ஆகியவை நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாலை 3 மணிக்கு ஆஞ்சநேயர் தேர் முன்னே செல்ல செம்பவள பஞ்சவர்ண தேரோட்டம் நடைபெறும். நிகழ்ச்சியில் யானை முன்செல்ல மயிலாட்டம், கோலாட்டம், சிங்காரி மேளம் இடம்பெறும். கோவில்விளை சந்திப்பில் அன்னதர்மம் நடைபெறும்.

வாகன பவனி

இரவு 8 மணிக்கு பல்சுவை நிகழ்ச்சி மற்றும் நாட்டுப்புற நடனங்கள், நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, அதைத்தொடர்ந்து அய்யா வாகன பவனி, கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் பிச்சைப்பழம் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்