ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கருப்பு சட்டை அணிந்து டாக்டர்கள் போராட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து அரசு டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2019-07-01 22:00 GMT
சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று டாக்டர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி டாக்டர் பெருமாள் பிள்ளை கூறியதாவது:-

தமிழக அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையான காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை வலியுறுத்தியும், எம்.சி.ஏ. அடிப்படையில் மருத்துவர் பணி இடங்களை குறைக்காமல், நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவ பணியிடங்களை ஏற்படுத்த வலியுறுத்தியும், சேவை மருத்துவர்கள் கலந்தாய்வை தொடர்ச்சியாக நடத்த வலியுறுத்தியும் டாக்டர் தினமான இன்று(அதாவது நேற்று) கருப்பு தினமாக அனுசரித்து, கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்துகிறோம்.

மற்ற மாநிலங்களில் அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, தமிழ்நாட்டில் டாக்டர்களுக்கு மிக குறைந்த அளவு ஊதியம் வழங்கப்படுகிறது. நாங்கள் கடந்த ஒரு வருடமாக இந்த கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தியும், அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்