தக்கலை அருகே பரிதாபம் மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி சாவு 35 நாட்கள் உணவருந்தாமல் உயிரை விட்ட சோகம்

தக்கலை அருகே மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவர், 35 நாட்கள் உணவருந்தாமல் உயிரை விட்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-07-01 22:15 GMT
பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தக்கலை அருகே குற்றக்கரை பகுதியை சேர்ந்தவர் மல்லன்பிள்ளை(வயது 60). இவருடைய மனைவி அமுதா (45). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மகனுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் முடிந்து விட்டது. அதனால் கணவன்- மனைவி இருவரும் மற்றொரு மகளுடன் வசித்து வந்தனர். மல்லன்பிள்ளை கூலி வேலைக்கு சென்று வந்ததுடன், மாந்திரீக தொழிலும் செய்து வந்தார்.

இந்தநிலையில் அமுதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மனைவி மீது அதிக அன்பு வைத்திருந்த மல்லன்பிள்ளை, அவர் இறந்த பிறகு சரிவர யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். மேலும் சாப்பிடாமலும் இருந்துள்ளார். அவரை குடும்பத்தினர் தேற்றி ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும், மனமுடைந்து காணப்பட்ட அவர், கூலி வேலைக்கு செல்வதையும் விட்டு விட்டார். மேலும் மாந்திரீக தொழிலையும் விட்டு விட்டார். வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார்.

மனைவி இறந்து நேற்றுடன் 35 நாட்கள் ஆகிறது. நேற்று காலை 7 மணி அளவில் மல்லன்பிள்ளை திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் உணவு சாப்பிடாததால் உடலில் சோர்வு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை உணவு சாப்பிடும்படி அறிவுரை கூறி சிகிச்சை அளித்து டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.

சோகம்

வீடு திரும்பிய மல்லன்பிள்ளை வீட்டில் படுத்து இருந்தார். காலை 9 மணி அளவில் உணவு சாப்பிட தந்தையை அவருடைய மகள் சத்தம் போட்டு எழுப்பினார். ஆனால், அவர் அசைவின்றி படுத்திருந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த மகள் அருகில் சென்று பார்த்தபோது, மல்லன்பிள்ளை இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

மனைவி இறந்த துக்கத்தில் 35 நாட்கள் உணவருந்தாமல் தொழிலாளி உயிரை விட்ட சம்பவம் தக்கலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்