கடலூர் கலெக்டர் அலுவலகத்தில், மனு கொடுக்க வந்த பெண், பிளேடால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண், பிளேடால் தனது கழுத்தை அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-07-01 22:00 GMT
கடலூர், 

கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மனைவி அமுதா (வயது 40). கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சீனிவாசன் இறந்து விட்டார். அவருக்கு சொந்தமான நிலத்தை உறவினர்கள் அபகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அமுதா போலீசில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிக்கொண்டு இ்ருந்தார். அவரிடம் மனுகொடுப்பதற்காக பொதுமக்களுடன் அமுதா நின்று கொண்டு இருந்தார்.

திடீரென அமுதா பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். அவரது கழுத்தில் இருந்து லேசாக ரத்தம் வந்தது. இதனை கவனித்த அதிகாரிகளும், பொதுமக்களும் அவரிடம் இருந்த பிளேடை பிடுங்கினார் கள். உடனடியாக அவரை போலீசார் அழைத்துக்கொண்டு கூட்ட அரங்குக்கு வெளியே சென்றனர்.

அங்கு கலெக்டர் அன்பு செல்வன் மாற்றுத்திறனாளிகளிடம் மனு வாங்கிக்கொண்டு இருந்தார். அவரிடம் அமுதாவை போலீசார் அழைத்து சென்றனர். அமுதாவிடம் கலெக்டர் விசாரித்த போது, தனது கணவரின் நிலத்தை உறவினர்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்று அழுது கொண்டே முறையிட்டார். அது பற்றி மனுகொடுங்கள், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்..இதன்பிறகு அமுதா கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு திரும்பி சென்றார். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்