42 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்

திருப்பூர் மாவட்டத்தில் 42 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

Update: 2019-07-01 23:40 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாலைவசதி, குடிநீர் வசதி வேண்டி உள்பட மொத்தம் 384 பேர் மனு கொடுத்தனர். சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகு தண்டுவடம் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு தலா ரூ.70 ஆயிரம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கு தொடு உணர்வு குச்சி, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், ஊத்துக்குளி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், அவினாசி, காங்கேயம் தாலுகாவுக்கு உட்பட்ட 24 பேருக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உதவித்தொகையும், தொழிலாளர் துறை(சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியத்தின் சார்பில் திருமண உதவித்தொகை உள்பட மொத்தம் 42 பேருக்கு ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

முன்னதாக கலெக்டரின் அறிவுரையின்படி பொதுமக்கள் குடிநீர் தொடர்பான மனுக்கள் அளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இங்கு அளிக்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ராகவேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்