சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.11½ லட்சம் தங்க நகைகள் பறிமுதல் பெண் பயணியிடம் அதிகாரிகள் விசாரணை

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.11½ லட்சம் தங்க நகைகளை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்தி வந்த பெண் பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-07-02 23:00 GMT
செம்பட்டு,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கும், உள்நாட்டிற்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் பலர் அங்கிருந்து தங்கம், மின்னணு பொருட்கள் போன்றவற்றை கடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இவற்றை தடுக்க திருச்சி விமான நிலையத்தில் உள்ள வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்து வருகிறார்கள். ஆனால் தங்கம் கடத்தி வருவது குறைந்தது போல் தெரியவில்லை.

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஸ்கூட் விமானம் திருச்சிக்கு வந்தது. இதில் வந்த பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் திருச்சி விமானநிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, திருவாரூரை சேர்ந்த தேவி (வயது 36) என்ற பெண் பயணி 355 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தேவியிடம் இருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.11½ லட்சம் ஆகும்.

மேலும் செய்திகள்