2 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்பது பற்றி காங்கிரஸ் தீவிர ஆலோசனை

2 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்பது பற்றி காங்கிரஸ் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

Update: 2019-07-03 00:15 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் பணியாற்றுகிறார்கள். மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரசை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். அதுபோல் முதலில் அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான சுதாகர், நாகேஷ் ஆகியோர் மந்திரி பதவி கிடைக்காததால் ஆதரவை திரும்ப பெற்றனர்.

அதன் பின்னர் கடந்த மாதம் (ஜூன்) அவர்கள் இருவரில் சுதாகர் எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார். நாகேஷ் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு அளித்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் மந்திரி பதவி வழங்கப்பட்டது. இதனால் கூட்டணி அரசுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல் ஓரளவுக்கு தீர்ந்தது. இருப்பினும் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி உள்பட மேலும் சிலர் அடிக்கடி போர்க்கொடி தூக்கி வந்தனர்.

இதற்கிடையே கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா மேற்கொண்ட ‘ஆபரேசன் தாமரை’ திட்டம் பலன்கொடுக்கவில்லை. இதனால் கொஞ்சகாலம் பா.ஜனதாவினர் அமைதியாக இருந்து வந்தனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. இதனால் மீண்டும் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்கும் நடவடிக்கையில் அக்கட்சி இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி ஒரு வாரம் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இத்தகைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தனர். இதனால் கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் ேமலும் சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த உடனேயே காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அவர்கள், அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கர்நாடகத்தில் எக்காரணம் கொண்டும் பா.ஜனதா ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியை தக்கவைக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அதாவது கர்நாடக மந்திரிசபையை மாற்றி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்கு ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர்களும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களான நாகேந்திரா, பி.சி.பட்டீல், அமரேகவுடா, பீமா நாயக் உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டணி அரசுக்கு ஏற்படும் ஆபத்தை சரிசெய்ய முடியும் என காங்கிரஸ் தலைவர்கள் நம்புகிறார்கள்.

அதற்கு வசதியாக, கட்சியின் விசுவாசமிக்க மூத்த மந்திரிகள் சிலர் பதவியை தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் மந்திரிசபை மாற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. முதல்-மந்திரி குமாரசாமி அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து பெங்களூரு திரும்பியதும் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோரின் ராஜினாமாவை சபாநாயகர் மூலம் அங்கீகரித்துவிட்டு, 2 தொகுதியிலும் இடைத்தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மிரட்டலுக்கு காங்கிரஸ் அடிபணியாது என்ற எச்சரிக்கையை விடுக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால், அதில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைப்பது குறித்தும் அக்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் அதே வேளையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கர்நாடக அரசியல் களத்தில் வரும் நாட்களிலும் பரபரப்புக்கு குறை இருக்காது.

மேலும் செய்திகள்