பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் பணம் வாங்கிய 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் - இணை ஆணையர் நடவடிக்கை

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் பணம் வாங்கியதாக கோவில் ஊழியர்கள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

Update: 2019-07-02 22:30 GMT
பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் பழனி பகுதியில் வழிகாட்டி என்ற பெயரில் சிலர் வெளிமாநில பக்தர்களிடம் பணம் வசூலித்து வருவதாக பொதுமக்கள், பக்தர்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் பக்தர்களிடம் விரைவில் சாமி தரிசனம் செய்ய உதவுவதாக கூறியும் சிலர் பணம் வசூலித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதைத்தொடர்ந்து போலி வழிகாட்டிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்ற அறிவிப்பு பலகைகள் அடிவார பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அவ்வப்போது ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவிப்புகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், பக்தர்களை ஏமாற்றி பணம் வசூல் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த சம்பவத்தில் போலி வழிகாட்டிகளுக்கு, கோவில் ஊழியர்கள் சிலர் உதவி செய்வதாகவும், சாமி தரிசனம் செய்ய வைப்பதாக கூறி பணம் வாங்குவதாகவும் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் 20 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கடந்த 2 நாட்களாக கோவிலில் பல்வேறு இடங்களில் பக்தர்களுடன் பக்தர்களாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கோவில் ஊழியர்களான கணேஷ், ரங்கசாமி, செந்தில், கார்த்தி, ஜெகன், சுரேஷ் மற்றும் ஒப்பந்த முறையில் பணி செய்யும் மோகன், கர்ணன், நாகராஜன், சரவணன், மாயவேல், கண்ணன் ஆகிய 12 பேர் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களிடம் பணம் வாங்கியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கோவில் ஊழியர்கள் 6 பேரையும் பணியிடை நீக்கம் செய்யவும், ஒப்பந்த ஊழியர்கள் 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து கோவில் ஊழியர்கள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்ய கோவில் இணை ஆணையர் உத்தரவிட்டார். மேலும் ஒப்பந்த ஊழியர்கள் 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் கோவிலில் பர பரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்