திண்டிவனம் அருகே, வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்

திண்டிவனம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2019-07-02 22:30 GMT
திண்டிவனம்,

திருக்கோவிலூர் அருகே உள்ள சொரயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணி(வயது 60). இவர் அதே ஊரை சேர்ந்த உறவினர்கள் 20 பேருடன் ஒரு வேனில் சென்னையில் நடைபெற்ற உறவினரின் இல்ல துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். பின்னர் மணி உள்ளிட்ட அனைவரும் நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து வேனில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். வேனை சொரயப்பட்டை சேர்ந்த ராஜேஷ் (25) என்பவர் ஓட்டினார். திண்டிவனம் அடுத்த திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சலவாதி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடியபடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதில் சின்னப்பன்(62), பால்ராஜ்(30), லிமா(60), மோட்சராணி (57), மணி, ஞானம்(45), வைலட்(40), ரெஜினா(45), ஜெயமணி(48), மகேஸ்வரி(65), அமுதா(45), ரோனிகா(50), ராணி(50), மரியபிரகாசம்(50), மேரி(60), தோபியாஸ்(60), பிச்சமுத்து(64), ராமசாமி(70) உள்ளிட்ட 21 பேரும் பலத்த காயமடைந்தனர். டிரைவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் சிக்கிய 21 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லிமா, சின்னப்பன், பால்ராஜ், மோட்சராணி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்