கனமழையால் ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடிய விமானம்; பயணிகள் உயிர் தப்பினர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு மும்பை நோக்கி ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று வந்தது. அதில் 167 பயணிகள் இருந்தனர்.

Update: 2019-07-02 23:15 GMT
மும்பை, 

விமானம் இரவு 11.45 மணியளவில் மும்பை விமான நிலையத்தின் மெயின் ஓடுதளத்தில் தரையிறங்கியது. அப்போது, பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இந்தநிலையில், தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம் திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி வேகமாக ஓடி தரையில் பாய்ந்தது. இதனால் விமானம் பயங்கரமாக குலுங்கியது.

மேலும் விமானத்தின் டயர்கள் சகதியில் சிக்கி புதைந்தன. இதனால் அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் கூச்சல் போட்டனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். அவர்கள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். 

மழையின் காரணமாக ஓடுதளத்தில் அதிக தண்ணீர் இருந்ததால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடியதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விமான விபத்து காரணமாகவும், மோசமான வானிலை காரணமாகவும் 203 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 

மேலும் மும்பை நோக்கி வந்த 55 விமானங்கள் ஆமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட அருகாமையில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

மேலும் செய்திகள்