பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரைக்கு ஆதாரம் இல்லை; கூட்டணி அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: தேவேகவுடா பேட்டி

பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரைக்கு ஆதாரம் இல்லை என்றும் கூட்டணி அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் தேவேகவுடா பேட்டியளித்து உள்ளார்.

Update: 2019-07-03 18:37 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கூட்டணி அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரைக்கு ஆதாரம் இல்லை என்றும் தேவேகவுடா கூறினார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரசை சேர்ந்த 78 எம்.எல்.ஏ.க்கள், ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 37 எம்.எல்.ஏ.க்கள் பாதுகாப்பாக உள்ளனர். கூட்டணி அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஆனால் உங்களுக்கு (பத்திரிகையாளர்கள்) ஏன் இவ்வளவு கஷ்டம். கூட்டணி அரசு கவிழ்வதை பார்க்க ஊடகங்களுக்கு ஆசை.

ஆனால் உங்களின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது. கூட்டணி அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதே போல் கட்சியை பலப்படுத்தும் பணிகளையும் செய்கிறோம். மதசார்பற்ற கொள்கை மீது கூட்டணி அரசு நம்பிக்கை வைத்துள்ளது. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை.

கூட்டணி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதாவினர் ஆபரேஷன் தாமரையில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. நான் இந்த நாட்டின் பிரதமராக இருந்தவன். ஆதாரங்கள் இல்லாமல் பேச மாட்டேன். பா.ஜனதா தேசிய தலைவர்கள் கூட்டணி அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள் என்று சித்தராமையா கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ளனர். அதன் மூலம் சித்தராமையாவுக்கு தகவல் கிடைத்திருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் நான் பேசி குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் சித்தராமையாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கொடுத்தால் அதை கவனித்துக்கொள்ள காங்கிரசில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், பரமேஸ்வர், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட தலைவர்கள் உள்ளனர். இந்த பிரச்சினைகளை தீர்க்கும் பலம் அவர்களுக்கு உள்ளது.  இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்