ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. ராஜினாமாவை வாபஸ் பெறுவார்; சித்தராமையா நம்பிக்கை

ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவார் என்று சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-03 21:15 GMT
பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சபாநாயகர் ரமேஷ்குமார், ஆனந்த்சிங்கின் ராஜினாமா கடிதம் மட்டுமே தனக்கு கிடைத்துள்ளதாக கூறினார்.

ரமேஷ் ஜார்கிகோளியின் ராஜினாமா கடிதம் பேக்ஸ் மூலம் சபாநாயகர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தனது கைப்பட எழுதிய கடிதம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து சித்தராமையா மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. மட்டுமே ராஜினாமா செய்துள்ளார். அவரிடம் நாங்கள் பேசுவோம். அவர் தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவார். அவரை நேரடியாக தொடர்புகொள்ள முடியவில்லை. வேறு நபர் மூலம் அவரிடம் பேசியுள்ளோம். ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்தது தொடர்பான காரணத்தை அவர் கூறியுள்ளார். ஆனால் ராஜினாமாவுக்கு அது உண்மையான காரணம் கிடையாது.

அவரை நாங்கள் சமாதானப்படுத்துவோம். மந்திரி பதவி கிடைக்கவில்லை என்பதற்காக அவர் ராஜினாமா செய்யவில்லை. ரமேஷ் ஜார்கிகோளியின் ராஜினாமா கடிதம் சபாநாயகர் அலுவலகத்திற்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து ஊடகங்களில் மட்டுமே செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகரே கூறியுள்ளார்.

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பின்னணியில் பா.ஜனதா உள்ளது. இந்த பணியை பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் செய்து வருகிறார்கள். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ் எந்த ஆபரேஷனையும் செய்யாது. தேவைப்பட்டால் பார்ப்போம். ஆனால் ஆபரேஷன் தாமரையோ அல்லது ஆபரேஷன் காங்கிரசோ எதுவாக இருந்தாலும் மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஜனநாயகத்தில் யாரும் இத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது.  இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்