சேலத்தில் நகைக்கடை காசாளர் வீட்டில் 10 பவுன் நகை–வெள்ளி பொருட்கள் திருட்டு

சேலத்தில் மனைவியை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற நேரத்தில் நகைக்கடை காசாளர் வீட்டில் 10 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

Update: 2019-07-04 23:00 GMT

சேலம்,

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 33). இவர் சேலத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யலட்சுமி(30). இவர்களுக்கு ஷிவானி என்ற 4 வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் திவ்யலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவரை உடன் இருந்து தாய் ரேவதி கவனித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரமேஷ் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 2.30 மணி அளவில் திவ்யலட்சுமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக ரமேஷ் ஒரு காரை வரவழைத்து அதில் தனது மனைவியை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். மாமியாரும் அவர்களுடன் சென்றனர். அப்போது வீட்டின் முன்பக்க கேட்டை பூட்டிவிட்டு சென்றனர்.

பின்னர் மனைவியை அவர் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அதிகாலை 5 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து ரமேஷ் உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு சில பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ¾ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். நகைக்கடை காசாளர் குடும்பத்துடன் வெளியே சென்றதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்