திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2019-07-04 23:00 GMT
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சி மற்றும் 92 சிறு கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் பொருட்கள் வாங்குவதற்கும், மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்காகவும் திருத்துறைப்பூண்டி நகர பகுதிக்கு வர வேண்டி உள்ளது.

திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்கு செல்வதற்கு புறவழிச்சாலை உள்ளது. மன்னார்குடி, திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல புறவழிச்சாலை இல்லை. இதனால் மன்னார்குடி, திருவாரூர் செல்லும் வாகனங்கள் திருத்துறைப்பூண்டி நகர பகுதி வழியாக செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்தை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆனந்தன், திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நகராட்சி ஆணையர் பாஸ்கரன், நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், தாசில்தார் ராஜன்பாபு, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவக்குமார், உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி, உதவி செயற் பொறியாளர் ரவி, சாலை ஆய்வாளர்கள் பூபதி, மணிவண்ணன், சித்ரா, துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திகுமார், இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

இதில் திருவாரூர் சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள், கடைகளின் மேற்கூரைகள் பொக்லின் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.

மேலும் செய்திகள்