திருவள்ளூரில் வக்கீல்கள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் வக்கீல்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-07-04 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் ஜே.என்.சாலையில் மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டு, குடும்பநல கோர்ட்டு உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு வளாகம் எதிரே உள்ள திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வக்கீல்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த வழித்தடத்தில் ½ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது வக்கீல்கள் கூறியதாவது:-

மாவட்ட மகளிர் கோர்ட்டில் உள்ள அரசு வக்கீல் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இதனால் வழக்குகளுக்கு வருபவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசு வக்கீல் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை பணியிட மாற்றம் செய்யவேண்டும் என தெரிவித்தனர். அப்போது மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர்கள் நித்யானந்தம், ஆதாம், செயலாளர்கள் ஜான்பால், ரகுபதி, துணைத்தலைவர் தினேஷ் குமார், சீனிவாசன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அரசு வக்கீலை கண்டித்தும், அவரை மாற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்