நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார் பொறுப்பேற்பு

நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனராக மகேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2019-07-04 22:30 GMT
நெல்லை,

நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்களாக இருந்த சாம்சன் மற்றும் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் வெளியூர்களுக்கு மாற்றப்பட்டனர். இதில் குற்றம்-போக்குவரத்து பிரிவுக்கு புதிய துணை கமிஷனராக சென்னையில் பணிபுரிந்து வந்த மகேஷ்குமார் நியமிக்கப்பட்டார்.

அவர் நேற்று பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு புதிய துணை கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து அவர், கமிஷனர் பாஸ்கரனை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் புதிய துணை கமிஷனருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதன் பின்னர் துணை கமிஷனர் மகேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகருக்கு புதிதாக பணிக்கு வந்துள்ளேன். மாநகரில் உள்ள போக்குவரத்து, குற்றப்பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். வழிப்பறி அதிகமாக நடப்பதாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும் கேட்கிறீர்கள். வழிப்பறி சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் சிறப்பு படைகள் அமைக்கப்படும். இதே போல் போக்குவரத்து நெரிசலை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மகேஷ்குமார் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் குரூப்-1 தேர்வு மூலம் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்துள்ளார். கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் துணை சூப்பிரண்டு, கூடுதல் சூப்பிரண்டாக பணிபுரிந்துள்ளார். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சூப்பிரண்டாகவும், சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராகவும், சென்னை போக்குவரத்து துணை கமிஷனராகவும் பணிபுரிந்துள்ளார்.

மேலும் செய்திகள்