நவிமும்பையில் பள்ளிக்கூடம் அருகே வெடிகுண்டு வைத்த 3 பேர் கைது

நவிமும்பையில் பள்ளிக்கூடம் அருகே வெடிகுண்டு வைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

Update: 2019-07-04 23:41 GMT
மும்பை, 

நவிமும்பை கலம்பொலியில் நியூ சுதாகாட் என்ற பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடம் அருகே கடந்த மாதம் 10-ந் தேதி சக்தி குறைந்த வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் அந்த வெடிகுண்டை கைப்பற்றி அங்குள்ள மைதானத்திற்கு கொண்டு சென்று அதை செயலிழப்பு செய்தனர். பள்ளிக்கூடம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நவிமும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக போலீசார் அங்குள்ள 40 கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் போலீசாரின் விசாரணையில், புனேயை சேர்ந்த சுசில் சாத்தே(வயது35), நவிமும்பை உல்வேயை சேர்ந்த மனிஷ் லட்சுமண், பன்வெலை சேர்ந்த தீபக் நாராயண்(55) ஆகியோர் தான் அந்த வெடிகுண்டை வைத்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

கைதான 3 பேரும் கல்குவாரி நடத்தி வருகின்றனர். இதில் சுசில் சாத்தேவுக்கும், தீபக் நாராயணுக்கும் அதிகளவில் கடன் சுமை இருந்து உள்ளது. அவர்கள் கலம்பொலியை சேர்ந்த கட்டுமான அதிபர் ஒருவரிடம் ரூ.2 கோடி பறிக்க திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் அவரது வீட்டு அருகில் அந்த வெடிகுண்டை வைத்தனர்.

அந்த பகுதியில் தான் நியூ சுதாகாட் பள்ளியும் அமைந்து உள்ளது. வீட்டு அருகே வெடிகுண்டு வைத்து உள்ளதாக மிரட்டி அவர்கள் கட்டுமான அதிபரிடம் பணம் பறிக்க திட்டமிட்டு இருந்து உள்ளனர். அதற்குள் போலீசார் அந்த வெடிகுண்டை கைப்பற்றி செயலிழப்பு செய்தனர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்