ஈரோட்டில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை –பணம் கொள்ளை; முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

ஈரோட்டில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-07-05 23:15 GMT

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). இவர் ஈரோடு தினசரி மார்க்கெட்டில் பழ மண்டி வைத்துள்ளார். சுப்பிரமணி தனது வீட்டின் முதல் மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கீழ் வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் மூஸ்தரி (வயது 62) என்ற மூதாட்டி தனது மகன், மருமகளுடன் வசித்து வருகிறார்.

சுப்பிரமணியின் அண்ணன் மாதேஸ்வரன். இவர் நாராயணவலசு பகுதியில் வசித்து வருகிறார். மாதேஸ்வரன் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறார். இதுதொடர்பாக சுப்பிரமணி மற்றும் மாதேஸ்வரன் குடும்பத்தினர் கடந்த 3–ந் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவு ஈரோடு வந்த இவர்கள் அனைவரும் மாதேஸ்வரன் வீட்டில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 கொள்ளையர்கள் சுப்பிரமணி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு வெளியே வந்துள்ளனர். சத்தம் கேட்டு மூஸ்தரி வெளியே வந்து பார்த்துள்ளார்.

அப்போது முகமூடி அணிந்தபடி 2 பேர் சுப்பிரமணியின் வீட்டில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளனர். மூஸ்தரியின் அருகில் அவர்கள் வந்ததும், திடீரென அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையையும் பறித்துள்ளனர். இதனால் மூஸ்தரி திருடன், திருடன் என கூச்சல் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் 2 கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் மூஸ்தரி இதுகுறித்து சுப்பிரமணிக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 14 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை காணவில்லை. அதை அந்த முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர் இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் பக்கத்து வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் ஒரு கொள்ளையனின் உருவம் பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமூடி கொள்ளையர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுப்பிரமணியின் வீடு பூட்டி கிடந்ததை அறிந்த கொள்ளையர்கள் அதிகாலை நேரத்தில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு உள்ளனர். அதன்படி அவர்கள் 2 பேரும் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு, கீழ் வீட்டில் இருந்த மூதாட்டி வெளியே வந்தபோது, அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையையும் அவர்கள் பறித்து சென்று விட்டனர்.

எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நாய் தொல்லை அதிகம் என்பதால் அவைகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பிஸ்கெட்டில் மயக்க மருந்து தெளித்து எடுத்து வந்துள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் எந்த நாய்களும் குரைக்கவில்லை. அதனால் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பிஸ்கெட் பாக்கெட்டை அருகில் உள்ள காலி இடத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்