காரை விற்றுத்தருவதாக பெண்ணிடம் மோசடி; 2 பேர் கைது

காரை விற்றுத்தருவதாக பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-05 23:30 GMT

பூந்தமல்லி,

சென்னை பாடி, கோபால நாயக்கர் தெருவை சேர்ந்தவர் மாலதி (வயது 36). இவர் தனக்கு சொந்தமான காரை விற்க முடிவு செய்தார். இதற்காக மதுரவாயல் வரலட்சுமி நகரில் உள்ள கார் விற்பனை செய்யும் நிறுவன உரிமையாளர்களான காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை சேர்ந்த நிஜாம் (40), மணிமாறன் (40) ஆகியோரிடம் கடந்த 2017–ம் ஆண்டு தனது காரை கொடுத்தார்.

காரை விற்றுத்தருவதாக வாங்கியவர்கள், அதன்பிறகு காரை விற்பனை செய்யவும் இல்லை. காரை மாலதியிடம் திருப்பிக்கொடுக்கவும் இல்லை. தொடர்ந்து அவரை ஏமாற்றி வந்தனர்.

இதனால் விரக்தி அடைந்த மாலதி, இதுபற்றி கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தீபக்குமார் வழக்குப்பதிவு செய்து, கார் விற்பனை நிறுவனத்தில் விசாரணை நடத்த சென்றார். அங்கு இருவரும் தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் கடப்பாக்கத்தில் பதுங்கி இருந்த நிஜாம், மணிமாறன் இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் இருவரும் காரை விற்றுத்தருவதாக கூறி மாலதியிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து மாலதியின் காரை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்