நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் விவசாயிகளுக்கு, அதிகாரி அழைப்பு

குமரி மாவட்ட விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெற நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று விவசாயிகளுக்கு, தக்கலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஷிபிலாமேரி அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2019-07-06 22:30 GMT
நாகர்கோவில்,

இன்றைய சூழ்நிலையில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அதிக அளவு நீர் தேவைப்படுகிறது. மரபுவழி பாசன முறையை மாற்றி அமைக்க நவீன பாசன முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் சொட்டு நீர் பாசனமும் ஒன்றாகும். சொட்டுநீர் பாசன முறையின் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பில் பயிர் செய்யலாம். 75 சதவீத நீரை இப்பாசன முறையின் மூலம் சேமிக்கலாம். சாகுபடி செலவு குறைவு, வருமானம் அதிகம் கிடைக்கும்.

நீரில் கரையும் உரங்கள் மற்றும் இயற்கை திரவ உரங்களை நேரடியாக பயிரின் வேர்ப்பகுதியில் வழங்க முடியும். களைகளை கட்டுப்படுத்தலாம். அதிக விளைச்சல் கிடைக்கும். தண்ணீர் மற்றும் உரங்கள் வீணாகாது. நிலத்தை சமப்படுத்த தேவையில்லை. சமநிலம், மேடான நிலம் ஆகியவற்றில் பாசனம் செய்யலாம். வேர் பகுதியில் ஈரப்பதம் எப்போதும் நிலைத்திருக்கும். மண் அரிப்பு தடுக்கப்படும். மின்சார பயன்பாடு குறைவாக இருக்கும். செடிகளுக்கு ஒரே சீராக தண்ணீர் வினியோகிக்கப்படும்.

சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிட்டா அடங்கல், நில வரைபடம், நிலவரி ரசீது, தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய ஆவணங்களுடன் நேரடியாக தோட்டக்கலைத்துறை இணையதளத்தில் பதிவு செய்யலாம். குறைந்தபட்சம் 50 சென்ட் நிலம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் தங்கள் நிலம் அமைந்துள்ள வட்டார தோட்டக் கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்