வைகோவுக்கு தண்டனை வழங்கியது வருத்தம் அளிக்கிறது - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

வைகோவுக்கு கோர்ட்டு தண்டனை வழங்கியது எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் அளிக்கிறது என்று சிவகாசியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி அளித்தார்.

Update: 2019-07-06 23:30 GMT
சிவகாசி,

சிவகாசி எஸ்.எச்.என்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 146 பள்ளிகளை சேர்ந்த 15,292 மாணவ-மாணவிகளுக்கு ரூ.18 கோடியே 76 லட்சத்து 78 ஆயிரத்து 716 மதிப்புள்ள மடிக்கணினிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிவஞானம், சாத்தூர் எம்.எல்.ஏ.எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி, தாசில்தார் வானதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வின் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார் என்றால் அவர் இதற்கு முன்னர் கட்சிக்காக உழைத்து இருக்கிறார். அதனால் அவர் அந்த பதவிக்கு வந்து இருக்கிறார். ஆனால் கடந்த தேர்தலின்போது 10 இடங்களில் மட்டும் பிரசாரம் செய்த ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு தற்போது அதிகாரம் மிக்க பதவி வழங்கி இருக்கிறார்கள். இது எப்படி தெரிகிறது என்றால் தி.மு.க. குடும்ப பாசத்தில் மூழ்கி இருக்கிறது. மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதைவிட குடும்ப நலனில் ஸ்டாலின் அதிக அக்கறை செலுத்துகிறார் என்பது தெளிவாகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மக்களை பாதிக்காத வகையில் பால் விலையும் உயரும். மக்கள் இதை ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் இந்த விலை ஏற்றம் இருக்கும்.

மத்திய அரசு பட்ஜெட்டில் பல சலுகைகள் உள்ளன. மத்திய அரசு சாமானிய மக்களுக்கு தகுந்த பட்ஜெட்டை கொடுத்துள்ளது. ஏழைகளுக்கான பட்ஜெட்தான் மத்திய பட்ஜெட். இந்தியா வல்லரசு ஆக இந்த பட்ஜெட் உதவியாக இருக்கும். பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி மந்திரி ஒரு தமிழர் என்ற பெருமை நமக்கு உண்டு. டி.டி.வி. தினகரன் மிகுந்த கவலையில் உளறிக்கொண்டு இருக்கிறார். தற்போது அவர் தனிமையில் இருக்கிறார். அவர் நினைத்தபடி நடக்கவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரனின் சதியை முறியடித்தார். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். இதை சகித்துக்கொள்ள முடியாத டி.டி.வி. தினகரன் மத்திய, மாநில அரசுகளை தினமும் குறை சொல்லி வருகிறார்.

அவருக்கு பின்னால் ஒரு யானை துரத்துகிறது, சிங்கம் மிரட்டுகிறது, புலி பாய காத்து இருக்கிறது. இதுதெரியாமல் அவர் கதை அளந்துகொண்டு இருக்கிறார். இதை புரிந்து கொண்டு இனிவரும் காலங்களில் அவர் சரியான வார்த்தைகளை உதிர்க்க வேண்டும். அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினி சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இனிவரும் காலத்தில் அவர்களுக்கும் மடிக்கணினி வழங்க சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் மாணவர்கள் சார்பில் வலியுறுத்தப்படும். நாடு வளர்ச்சி அடைகிறது என்றால் மக்களின் வருமானமும், பொருட்களின் விலையும் உயரதான் செய்யும்.

இந்த நேரத்தில் பெட்ரோல் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது என்று கூறக்கூடாது. பொருளாதார வளர்ச்சி தேவை என்றால் இதுபோன்ற விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது. பெட்ரோல் விலை உயர்வு எண்ணெய் நிறுவனத்தின் நடவடிக்கையால் ஏற்படுகிறது. ஒரு எம்.பி. சீட்டை பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்குவதாக கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது இருகட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இதை கண்டிப்பாக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் நிறைவேற்றி தருவார்கள். அந்த ஒரு சீட் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்படும். ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோவுக்கு தண்டனை வழங்கியது எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தமாக இருக்கிறது. ஏன் என்றால் அவர் ஒரு தமிழ் போராளி. தமிழர்களின் உணர்வுகளை தான் அவர் பிரதிபலித்தார்.

அதற்காக அவருக்கு இந்த தண்டனை என்றால் ஒரு கஷ்டமான செய்தி தான். உலகத்தில் எந்த மூலையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் கடந்த 30 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறார். அவருக்கு இப்படி ஒரு சங்கடம் என்பது கஷ்டமாக இருக்கிறது. நமது பகுதியை சேர்ந்தவர் கைகோ.

உள்ளாட்சி தேர்தலில் வழக்கம்போல் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும். கூட்டணி குறித்த இறுதி முடிவை முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் சேர்ந்து எடுப்பார்கள். கடந்த தேர்தலில் நாங்கள் பாரதீய ஜனதா கட்சியுடன் சேர்ந்ததால் எங்களுக்கு தோல்வி இல்லை. தி.மு.க. கொடுத்த பொய்யான வாக்குறுதியால் தான் தி.மு.க. கூட்டணிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அ.தி.மு.க. சிவகாசி நகர செயலாளர் அசன்பதுருதீன், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், நடுவப்பட்டி குமரேசன், ஆனந்தயுவராஜ், வடப்பட்டி தனுஷ், கார்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்