நீடாமங்கலம் பகுதியில் பாலங்கள் அமைய உள்ள இடத்தை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்

நீடாமங்கலம் பகுதியில் பாலங்கள் அமைய உள்ள இடத்தை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

Update: 2019-07-07 23:00 GMT
நீடாமங்கலம்,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் வகையில் நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் பூவனூர் தட்டி என்ற இடத்தில் இருந்து கோரையாற்றின் குறுக்கே நீடாமங்கலம் பேரூராட்சி கொத்தமங்கலம் சாலையை இணைக்கும் வகையில் ரூ.2½ கோடி மதிப்பில் ஒரு பாலமும், நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பகுதியில் ஒளிமதி ஊராட்சி வையகளத்தூர் கிராமத்தையும் இணைக்கும் வகையில் ரூ.2½ கோடி மதிப்பில் ஒரு பாலமும் கட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு முன் மொழிவுகள் அனுப்பப்பட உள்ளது.

இந்த நிலையில் பூவனூர்தட்டி கோரையாறு, பழைய நீடாமங்கலம் வெண்ணாறு பகுதியில் பாலங்கள் அமைய உள்ள இடத்தினை அமைச்சர் காமராஜ் நேற்று பார்வையிட்டார்.

அப்போது திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, செயற்பொறியாளர் குமார், திருவாரூர் உதவி கலெக்டர் முருகதாஸ், தாசில்தார் கண்ணன், ஒன்றிய கூடுதல் ஆணையர் தமிழ்ச்செல்வி, பேருராட்சி செயல் அலுவலர் முருகேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இந்த புதிய பாலங்கள் அமைவதன் மூலம் நீடாமங்கலம் பகுதி கிராமப்புற மக்கள் பெரிதும் பயனடைய முடியும். மேலும் இந்த இரண்டு பாலங்கள் கட்டுவதன் மூலம் நீடாமங்கலம் நகரில் நாள்தோறும் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படும்போது ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க முடியும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்