பெண் போலீஸ் அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 8½ பவுன் நகை- 500 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு

மன்னார்குடியில் பெண் போலீஸ் அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 8½ பவுன் நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-07-07 23:00 GMT
மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாயார் நகரை சேர்ந்தவர் ரெகுநாதன்(வயது43). இவர் புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தாமரைச்செல்வி. இவர் நாகை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்றபிரிவில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு ரெகுநாதனும் தாமரைச்செல்வியும் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர்.

நேற்று காலை அவர்கள் கண் விழித்து பார்த்த போது அவர்கள் தூங்கி கொண்டிருந்த அறையின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வீட்டில் இருந்தவர்களை கதவை திறந்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் பார்த்தபோது வீட்டின் கொல்லைப்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

மேலும் மற்றொரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8½ பவுன் நகை, 500 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நள்ளிரவில் வீட்டின் கொல்லைப்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரெகுநாதனும் தாமரைச் செல்வியும் தூங்கி கொண்டிருந்த அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு பீரோவை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

திருவாரூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான கை ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்