அனைத்து ஊராட்சிகளிலும் தடையின்றி குடிநீர் வழங்க துரித நடவடிக்கை; அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.

Update: 2019-07-08 00:07 GMT
சிவகங்கை,

மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊராட்சி அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலெக்டர் பேசியதாவது:- அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டும்.

மேலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் குளங்கள், ஊருணிகள் மற்றும் கண்மாய்கள், வரத்துக்கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

இந்த பணியினை ஒருமாதத்திற்குள் விரைந்து முடித்திட அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். நீர்நிலை ஆதாரங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட பணிகள் மேற்கொள்ள வேண்டும். தெருவிளக்குகள் போன்ற கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை மேற்கொள்வதுடன் சாலைகள், பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் அருண்மணி, உதவி இயக்குனர் விஜயநாதன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்