மணவாளக்குறிச்சி அருகே சத்துணவு ஊழியரிடம் நகை பறிப்பு; 3 வாலிபர்கள் கைது

மணவாளக்குறிச்சி அருகே சத்துணவு ஊழியரிடம் நகையை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-08 22:15 GMT
மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு காரவிளை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மனைவி சுனிதா மேரி (வயது 51). இவர் முட்டம் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் சத்துணவு ஊழியராக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று சுனிதா மேரி தனது மகன் பெஞ்சமினுடன் மோட்டார் சைக்கிளில் குருந்தன்கோடு ராமநாதபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

நகை பறிப்பு

பின்னர், அவர்கள் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். திருநயினார்குறிச்சி ஏலா பகுதியில் வந்தபோது, பின்னால், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென அவர்களை வழிமறித்தனர். பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களை கீழே தள்ளி சுனிதாமேரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து சுனிதாமேரி மணவாளக்குறிச்சி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம வாலிபர்களை தேடிவந்தனர்.

3 பேர் கைது

 இந்தநிலையில் மணவாளக்குறிச்சி போலீசார் நேற்று முன்தினம் பேயோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக வந்தனர். உடனே, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியபோது, முன்னுக்குபின் முரணாக பேசினர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

 விசாரணையில் அவர்கள், மணவாளக்குறிச்சி பிள்ளையார்கோவிலை சேர்ந்த முகமது அல்டாப்(21), வடக்கன்பாகத்தை சேர்ந்த அஜ்மல்கான்(19), முகமது ரிஜா டவுபிக்(19) என்பது தெரியவந்தது. இவர்கள்தான் சுனிதாமேரியிடம் நகை பறித்தது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும், ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்