அந்தியூர் அருகே பரபரப்பு; தேவாலயத்தின் முன்புறம் இருந்த மாதா சிலைகள் உடைப்பு

அந்தியூர் அருகே தேவாலயத்தின் முன்புறம் இருந்த மாதா சிலைகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-08 23:00 GMT

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள நகலூர் பெருமாள்பாளையத்தில் வனசின்னப்பர் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் முன்புற வாயிலில் இருபக்கத்திலும் ‘கெபி‘ எனப்படும் கண்ணாடி கூண்டுக்குள் மாதா சிலைகள் நிறுவப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் நேற்று காலை 7 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் வழிபாடு நடத்துவதற்காக சென்றார்கள். அப்போது ஆலயத்தின் முன்பகுதியில் இருந்த 2 கண்ணாடி கூண்டுகளும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 2 மாதா சிலைகளும் உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருந்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனே தேவாலயத்தின் பாதிரியார் ஜோசப் அமல்ராஜ்க்கு தகவல் கொடுத்தார்கள். அதற்குள் இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதால் அந்தியூர், தவுட்டுப்பாளையம், நகலூரை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ மக்கள் அங்கு திரண்டுவிட்டார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இதுகுறித்து பாதிரியார் ஜோசப் அமல்ராஜ் அந்தியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் தேவலாயத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அங்கு சூழ்ந்திருந்த கிறிஸ்தவ மக்கள் மாதா சிலைகளை உடைத்தவர்களை உடனே கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அதற்கு இன்ஸ்பெக்டர் ரவி இதுகுறித்து உடனே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று அவர்களிடம் கூறினார். இதைத்தொடர்ந்து தேவாலயத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாதா சிலைகளை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்