சான்றிதழ்கள் வழங்க பணம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

சான்றிதழ்கள் வழங்க பணம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2019-07-08 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மனு அளிப்பதற்காக நேற்று திரளான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இதில் கீழ்வேளூர் அருகே கோவில்கடம்பனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். சான்றிதழ்கள் வழங்க பணம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதேபோல சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கிராம ஊராட்சிகளில் கிராம சபையை போலவே மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பொதுமக்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகளை உறுதி செய்திருக்கிறது. இந்த சட்ட திருத்தமானது கடந்த 2010-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்டது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததாக கருதப்பட்டாலும் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டியின் கட்டமைப்பு செயல்பாடுகள் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விதிகள் இன்னும் வரையறுக்கப்பட்டு அறிவிக்கப்படவில்லை.

இதனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பங்கேற்பு என்பது வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. எனவே, மாவட்டத்தில் வார்டு ஏரியா கமிட்டி, ஏரியா சபை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்