கந்துவட்டி கொடுமையால் வாலிபர் தீக்குளிக்க முயற்சி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கந்துவட்டி கொடுமையால் வாலிபர் ஒருவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-07-08 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இந்நிலையில் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த ஒரு வாலிபர் திடீரென்று எழுந்து கந்து வட்டி கொடுமையில் இருந்து என்னையும், எனது குடும்பத்தினரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷமிட்டவாறு கலெக்டர் கார் அருகே வேகமாக ஓடி வந்து தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது தலையில் ஊற்றி தீ வைக்க முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் ஓடிச்சென்று அந்த வாலிபரை தடுத்து நிறுத்தினார். இதையடுத்து சக போலீசார் ஒன்று சேர்ந்து தீக்குளிக்க முயன்ற வாலிபரை அழைத்து சென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த நகராட்சி குடிநீர் தொட்டி குழாயின் கீழே அமர வைத்து தண்ணீரை திறந்து விட்டனர். அதனை தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வாலிபர் கூறியதாக போலீசார் தெரிவித்தாவது:-

பெரம்பலூர்- ஆத்தூர் ரோட்டில் உள்ள முத்து நகரை சேர்ந்த தங்கவேலு மகன் விஜயகுமார்(வயது 35). அவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளது. மேலும் விஜயகுமார் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார். அவர் பெரம்பலூரில் கந்து வட்டிக்கு ஒருவரிடம் ஆவணங்களை கொடுத்து ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் கடன் வாங்கினாராம். அந்த கடன் தொகைக்கு கந்து வட்டியாக ரூ.24 லட்சம் செலுத்தி விட்டாராம்.

ஆவணங்களை தர மறுத்து கொலை மிரட்டல்

ஆனால் அவர் விஜயகுமார் கொடுத்த ஆவணங்களை திருப்பி தரமால் கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர் மிரட்டி வந்தாராம். இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் விஜயகுமார் பலமுறை மனு கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வில்லையாம். இந்நிலையில் விஜயகுமாருக்கு கந்து வட்டிக்கு கடன் கொடுத்தவரின் மருமகன் ஆவணங்களை தர மறுத்து, கொலை மிரட்டல் விடுத்து வருகிறாராம். இதனால் உரிய விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்து ஆவணங்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விஜயகுமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். விஜயகுமாருடன், அவருடைய தந்தை தங்கவேலு வந்திருந்தார். பின்னர் போலீசார் விஜயகுமாரையும், தங்கவேலுவையும் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்து வட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிரந்தர சாதி சான்றிதழ் கேட்டு மனு

ஆலத்தூர் தாலுகா கீழமாத்தூர் கலைக்கூத்தாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து எங்களுக்கு நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இதேபோல் வீரபோயர் இளைஞர் பேரவையின் மாநில மருத்துவர் அணி தலைவர் டாக்டர் ரமேஷ் தலைமையில் கொடுத்த மனுவில், தமிழகத்தில் போயர், ஒட்டர் உள்பட 68 பூர்வ பழங்குடி மக்கள் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் டி.என்.டி. என்று சாதி சான்றிதழ் பெற்று கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது அதிகாரிகள் தவறுதலாக முன்னுக்கு பின் முரணாக மத்திய அரசு திட்டங்களை பெறுவதற்கு மட்டும் டி.என்.டி. என்றும், தமிழகத்தில் தொடர்ந்து டி.என்.சி. என்றே வழங்கப்படும் என்று கூறியிருப்பது சட்டத்திற்கு எதிரானது. எனவே போயர், ஒட்டர் உள்பட பூர்வ பழங்குடி மக்களுக்கு டி.என்.டி. என்றே சாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை

பெரம்பலூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் மற்றும் கரும்பு வளர்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் கொடுத்த மனுவில், குன்னம் தாலுகா வேப்பூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கல்லூரியில் படிக்கு மாணவிகளுக்கு வசதியாக அரியலூரில் இருந்து வேப்பூர் வழியாக சன்னாசிநல்லூருக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டது. தற்போது கடந்த சில மாதங்களாக அந்த பஸ் இயக்குவது நிறுத்தப்பட்டது. இதனால் மாணவிகள் கல்லூரிக்கு சரியான நேரத்துக்கு வரமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நிறுத்தப்பட்ட அந்த அரசு பஸ்சை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுபோல் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 293 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

விலையில்லா தையல் எந்திரங்கள்

மேலும் கூட்டத்தில் கலெக்டர் சாந்தா மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கை, கால் பாதிக்கப்பட்ட 11 மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நல்ல நிலையில் உள்ள நபரை திருமணம் செய்துகொள்ளும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தலா 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.25 ஆயிரம் காசோலை வழங்கினார். ரூ.1,100 மதிப்புள்ள பார்வையற்றோருக்கான கை கடிகாரங்களை 5 மாற்றுத்திறனாளிகளுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.6,551 வீதம் 6 பேருக்கு விலையில்லா தையல் எந்திரங்களை கலெக் டர் சாந்தா வழங்கினர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி (பொறுப்பு) மஞ்சுளா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்