நாமக்கல்லில் தொழில்நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் சப்-கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்

நாமக்கல்லில் நேற்று தொழில்நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை சப்-கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.

Update: 2019-07-08 21:45 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இளைய தலைமுறையினருக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வுகள் மற்றும் சுயவேலைவாய்ப்பு வழங்குதல் தொடர்பான தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு வாரமாக ஜூலை மாதம் 2-வது வாரத்தை கடைபிடிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.

இவ்வார விழாவின் தொடக்கமாக தொழில்நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் உள்பட வேலைவாய்்ப்பு அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு ஊர்வலத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக சென்று மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்தை வந்து அடைந்தது.

முன்னதாக சப்-கலெக்டர், தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சி அரங்கில் உயர்கல்வி, போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் பயிற்சி குறித்த தகவல்களும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செயல்பாடுகளின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தது. இதனை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்