அரியமங்கலத்தில் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

அரியமங்கலத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், எழுந்த புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Update: 2019-07-08 22:45 GMT
பொன்மலைப்பட்டி,

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் பகுதியில் சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு அமைந்துள்ளது. திருச்சி மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இங்கு கடந்த சில ஆண்டுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக சேர்ந்துள்ளன. இதனால் குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. குப்பைக்கிடங்கில் தீப்பிடிப்பதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தூய்மை இந்தியா திட்டத்திற்காக தமிழக அரசு சுமார் ரூ.49 கோடியை, பயோ மைனிங் திட்டத்தின் மூலம் இங்குள்ள குப்பைகளை அகற்றுவதற்காக ஒதுக்கியது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 6 மாதங்களாகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் குப்பைகள் அதிகரித்து கொண்டே இருப்பதால், இப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.

தீப்பிடித்தது

இந்நிலையில் நேற்று காலை திடீரென குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்றின் காரணமாக மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு, அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து அங்கு 6 தீயணைப்பு வண்டிகள், 5 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். புகை மூட்டத்தால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அருகில் உள்ள சாலையில் வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. தீயை விரைந்து அணைக்கவும், குப்பை கிடங்கில் தீப்பிடிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்