நாகர்கோவில் அருகே இரட்டை கொலை: சென்னை கோர்ட்டில் 2 பேர் சரண்

நாகர்கோவில் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் 2 பேர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2019-07-08 23:15 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவருடைய மனைவி சுயம்புகனி. இவர்களுடைய மகன் அஜித்குமார் (வயது 21). பாலிடெக்னிக் முடித்து விட்டு, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், கட்டிட வேலைக்கு சென்று வந்தார். தற்போது இவர்கள் நாகர்கோவில் அருகே வண்டிகுடியிருப்பு பகுதியில் வசித்து வந்தனர். அஜித்குமாரும், அதேபகுதியை சேர்ந்த குமாரின் மகன் அர்ஜூனும்(17) நண்பர்கள். நேற்று முன்தினம் மாலை அஜித்குமாரும், அர்ஜூனும் ஒரு மோட்டார் சைக்கிளில் சி.டி.எம்.புரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, 3 மோட்டார் சைக்கிள்களில் ஒரு கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் இருவரையும் வழிமறித்து நிறுத்தினர். உடனே அவர்கள் ஓட முயன்றனர். அந்த கும்பல் அவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், அஜித்குமாரும், அர்ஜூனும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இதைகண்ட அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். உடனே அந்த கும்பல் அவர்கள் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

முன்விரோதம்

இதுபற்றி சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, கொலை செய்யப்பட்ட அஜித்குமார், அர்ஜூன் ஆகியோர் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே ஒரு அடிதடி வழக்கு பதிவாகி இருப்பதும், அவர்கள் மினி பஸ்சில் பயணம் செய்யும் போது, தகராறு செய்ததை தட்டிக்கேட்ட மினி பஸ் டிரைவர் சுந்தர் (27) என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நிஷாந்த், கோட்டார் ராமச்சந்திரன் என்ற மோகன், அவருடைய தம்பி ரமேஷ் (30) ஆகியோர் மினி பஸ் டிரைவர் சுந்தருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த அஜித்குமாரும், அர்ஜூனும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனால், முன்விரோதத்தில் கொலை நடந்திருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். அதைத்தொடர்ந்து கொலையாளிகளை கண்டுபிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

சென்னை கோர்ட்டில் சரண்

இந்த நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சென்னை, தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ரமேஷ், சுந்தர் ஆகிய 2 பேர் சரண் அடைந்தனர். இருவரையும் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட்டில் சரண் அடைந்த 2 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்