குன்னூர் அருகே பரிதாபம், ஆதிவாசியை காட்டுயானை மிதித்து கொன்றது

குன்னூர் அருகே ஆதிவாசியை காட்டுயானை மிதித்து கொன்றது. உடலை எடுக்க விடாமல் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-08 23:00 GMT
குன்னூர்,

குன்னூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் ஆனைப்பள்ளம் ஆதிவாசி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் மாரிசெல்லன்(வயது 66). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சரசு. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கூலி வேலைக்காக மாரிசெல்லன் பில்லூர்மட்டம் பகுதிக்கு சென்றார். வேலை முடிந்து மாலை 6.30 மணிக்கு அங்கிருந்து வனப்பகுதி வழியாக ஆனைப்பள்ளம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். சின்னாளகோம்பை என்ற இடத்தில் அவர் வந்தபோது, 5 காட்டுயானைகள் அங்கு நின்று கொண்டிருந்தன. இதை சற்றும் எதிர்பாராத மாரிசெல்லன் காட்டுயானைகளிடம் இருந்து தப்பிக்க, வந்த வழியிலேயே ஓட்டம் பிடித்தார். இருப்பினும் ஒரு காட்டுயானை ஆக்ரோஷத்துடன் அவரை துரத்தி சென்று துதிக்கையால் தாக்கியது. பின்னர் கீழே விழுந்த அவரை காலால் மிதித்தது. இதில் மாரிசெல்லன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையில் இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை. நேற்று காலை சின்னாளகோம்பையில் இருந்து பில்லூர்மட்டம் நோக்கி வனப்பகுதி வழியாக நடந்து சென்ற தொழிலாளர்கள் காட்டுயானை மிதித்து மாரிசெல்லன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே வனத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள், மாரி செல்லனின் உறவினர்கள் உள்பட ஆனைப்பள்ளம் பொதுமக்கள் திரண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை வனப்பகுதியில் இருந்து வெளியே கொண்டு வர ஆம்புலன்சு வாகனம் பில்லூர்மட்டத்துக்கு வரவழைக்கப்பட்டது. ஆனால் பில்லூர்மட்டத்தில் இருந்து சின்னாளகோம்பைக்கு செல்ல சாலை வசதி சரிவர இல்லாததால், ஆம்புலன்சு வாகனத்தை அங்கு கொண்டு செல்ல முடியவில்லை.

அதன்பின்னர் தொட்டில் கட்டி உடலை தூக்கி செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் உடலை எடுக்க விடாமல் ஆனைப்பள்ளம் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், காட்டுயானைகளிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும், பில்லூர்மட்டம் அருகிலேயே குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனே கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பின்னர் மாரிசெல்லனின் உடலை எடுக்க பொதுமக்கள் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் தொட்டில் கட்டி பில்லூர்மட்டம்-ஆனைப்பள்ளம் மண் சாலைக்கு உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் வனத்துறை வாகனத்தில் உடல் ஏற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காட்டுயானை ஆதிவாசியை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்