காஞ்சீபுரம் அத்திவரதர் தரிசன நேரம் அதிகரிப்பு அதிகாலை 4½ மணி முதல் இரவு 10 வரை தரிசிக்கலாம்

காஞ்சீபுரம் அத்திவரதர் தரிசன நேரம் அதிகாலை 4½ மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-09 23:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நேற்று 9-வது நாளாக மாம்பழ நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் சென்று அத்திவரதரை தரிசித்தனர். நேற்று ஒரே நாளில் அத்திவரதரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர்.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என்று இருந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி மேல் அத்திவரதரை அதிகாலை 4½ மணி முதல் இரவு 10 மணி வரை தரிசிக்கலாம் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால் அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலவச தரிசனத்துக்காக அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து பக்தர்கள் கிளம்புகிறார்கள். ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக அத்திவரதரை சந்திக்க முடியவில்லை என்று முதியோர்-மாற்றுத்திறனாளிகள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து சென்னை கே.கே.நகரை சேர்ந்த ஓய்வுப்பெற்ற பேராசிரியர் அரங்கராஜன் கூறுகையில், கடும் கூட்டம் காரணமாக முதியோர்-மாற்றுத்திறனாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். மக்களோடு மக்களாக எங்களையும் தரிசிக்க சொல்கிறார்கள். இதனால் கூட்டத்தில் சிக்கி காயம் ஏற்படுகிறது. ஏராளமானோர் மயங்கி விழும் சம்பவங்களும் நடக்கின்றன. முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாரும், வயதானோருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துதர கோவில் நிர்வாகமும் தவறிவிட்டார்கள்.

இதனால் ஏராளமானோர் அத்திவரதரை தரிசிக்காமலேயே விரக்தியில் வீடு திரும்புகிறார்கள். எனவே அத்திவரதரை தரிசிக்க முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வழி உள்பட உரிய வசதிகளை செய்துதர வேண்டும்”, என்றார்.

மேலும் செய்திகள்