விவசாயியை கொன்ற முகமூடி கொள்ளையர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பு

அரூர் அருகே விவசாயியை கொன்ற வழக்கில் முகமூடி கொள்ளையர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

Update: 2019-07-09 22:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள மேல்செங்கப்பாடி பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 70), விவசாயி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது வீட்டில் மனைவியுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த 3 பேர் இவருடைய வீட்டிற்குள் நுழைந்து சென்னியப்பனின் மனைவி குப்பம்மாளின் கழுத்தில் இருந்த தங்க நகைகளை பறித்து கொண்டு அங்கிருந்து ஓட முயன்றனர்.

இந்த சத்தம் கேட்டு எழுந்த சென்னியப்பன் முகமூடி கொள்ளையர்களை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அவரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து குப்பம்மாளையும் கொலை செய்ய முடிவு செய்த முகமூடி கொள்ளையர்கள் அவருடைய முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி உள்ளனர். இதில் அவர் மயங்கினார். அவரும் இறந்து விட்டதாக நினைத்த முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் சற்று நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த குப்பம்மாள் வீட்டு தோட்டத்தில் இருந்த மணிவண்ணன் என்பவர் மூலமாக தனது மகன் மற்றும் உறவினர்களுக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். இந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மேல்செங்கம்பாடியை சேர்ந்த ஆறுமுகம்(46), வீரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த சிவக்குமார்(34) ஆகியோர் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களுக்கு உடந்தையாக 14 வயது சிறுவனும் செயல்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் குற்றம் உறுதியானதால் ஆறுமுகம், சிவக்குமார் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.8,500 அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜீவானந்தம் நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்